ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது.
20-20 ஓவர் வடிவில் நடைபெறும் இப்போட்டித் தொடரின் முதலாவது அரைஇறுதிப் போட்டியில், சக்திவாய்ந்த பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நிஷின்ஹி கொரோகி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது
இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த அணித்தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைக் குவித்தார். 50 பந்துகளை எதிர்கொண்ட இவரது அதிரடி இன்னிங்ஸில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.
அவருக்குச் சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய ஹசினி பெரேரா 26 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார். இவரது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.
இவ்விருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 56 பந்துகளில் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்துகொண்டனர்.
இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரைஇறுதிப் போட்டி இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே நடைபெறவுள்ளதுடன், அதில் வெற்றிபெறும் அணி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்த்து மோதவுள்ளது.


