இந்தியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய ‘ஏ’ அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

 

கட்டாரின் தோஹாவில் இன்று (26) நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைக் குவித்தது.

 

இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 78 ஓட்டங்களையும், இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஷாபாஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

அணித்தலைவர் திலக் வர்மா 53 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 27 பந்துகளில் 40 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

பந்துவீச்சில் இலங்கை சார்பில் ரவிந்து பெர்னாண்டோ, ஜனித் லியனகே மற்றும் நிபுன் தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

318 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை ‘ஏ’ அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சினெத் ஜயவர்தன மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் வானவேடிக்கை காட்டி மிரட்டலான தொடக்கத்தை வழங்கினர்.

 

இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்காக 21.3 ஓவர்களில் 174 ஓட்டங்களைப் பகிர்ந்து அசத்தியது.

 

மிகவும் ஆக்ரோஷமாக ஆடிய சினெத் ஜயவர்தன வெறும் 62 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 70 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 6 பிரமாண்ட சிக்ஸர்கள் அடங்கலாக 105 ஓட்டங்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

 

மறுமுனையில் பொறுப்புடனும் அதேவேளை வேகமாகவும் ஆடிய லசித் குரூஸ்புள்ளே 98 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 107 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் நிஷான் மதுஷ்க மற்றும் அணித் தலைவர் பவன் ரத்நாயக்க பொறுப்புடன் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

 

அதனடிப்படையில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தடுமாற்றம்!

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி...

இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.     போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள்...