2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (2) அன்டிகுவா மற்றும் பார்புடாவை (Antigua and Barbuda) சென்றடைந்துள்ளார்.
பிரதமர் அன்டிகுவாவின் வி. சி. பேர்ட் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த போது, அந்நாட்டின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சேவை விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் மைக்கேல் ஜோசப்பினால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய மாநாட்டின் பிரதான நிகழ்வுகளுடன் இணைந்து நடைபெறவுள்ள ‘பொதுநலவாய மகளிர் மன்றத்திலும்’ (Commonwealth Women’s Forum) கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து முதலீட்டு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி, பெண்கள் வலுவூட்டல் மற்றும் உலகளாவிய சுகாதாரக் கூட்டுறவு ஆகியவை குறித்துப் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.


