நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல், காலி ஆகிய 10 மாவட்டங்களில் 60,674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் 794 குடும்பங்களைச் சேர்ந்த 3,397 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக, நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
14 வீடுகள் முற்றாகவும், 817 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.