இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (17) மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச போட்டி அட்டவணை இடையூறை ஏற்படுத்தி இருப்பதோடு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
புதிய போட்டி அட்டவணையின்படி IPL தொடர் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியே நிறைவடையவுள்ளது. அது திட்டமிடப்பட்ட காலத்தை விடவும் தாமதத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் பருவம் ஆரம்பமாவது மற்றும் ஜூன் 11 ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான தயார்படுத்தல்கள் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் ஒருநாள் தொடர் எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்காக அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தயார்படுத்தல்களை மே இறுதியில் ஆரம்பிக்கவுள்ளன.