Date:

வாழ்வைக் குழப்பும் மூன்றாம் நபர் தலையீடு, இப்படியும் நடக்கலாம்

✍️ றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்

“அடுத்தவர் பானையில் என்ன வேகிறது என்று பார்ப்பதை தவிர்த்து உன் பானையில் கருகுவதைப் பார்…”

அண்மையில் என் கண்ணில் பட்ட அர்த்தமுள்ள வாசகம் இது. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தாலே குடும்பத்தில் பாதி பிரச்சினைகள் தீரும்.. குடும்ப நிம்மதியை சீர்குலைப்பதில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு நிகர் அதுவே தான். அதன் உளவியல் தாக்கங்களை இங்கே சற்று அலசுவோம்.

இந்த மூன்றாம் நபரின் தலையீடு மனிதனின் அடிப்படை உரிமையை மீறும் ஒரு செயற்பாடாகும். அது ப்ரைவசியை சீண்டும். மனித மனங்களில் குரோதத்தை உண்டு பண்ணும். தப்பான எண்ணங்களை வளர்க்கும். தனிமனித சுதந்திரத்தில் கைவைக்கும். முக்கியமாக தான் இருக்கும் நிலையை கஷ்ட்டமான ஒரு நிலையை போல சித்தரித்துக் காட்டும்.

எப்பொழுது நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதற்கு மூன்றாம் நபருக்கு இடம் கொடுக்கிறீர்களோ அப்போதே உங்கள் வாழ்க்கைக்கான பிரச்சினையை நீங்களே அனுமதிக்கிறீர்கள்.
பொதுவாக மனம் அன்பை, அக்கறையை, தன் மீது கவனம் செலுத்துவதை வெகுவாக விரும்புகிறது. அவற்றை எதிர்பார்க்கவும் செய்கிறது.

அதே அன்பு, அக்கறை, கவனம், நல்லது செய்தல் என்ற பெயர்களில்தான் மூன்றாம் நபர் உள்நுழைகிறார். இங்கே மூன்றாம் நபர் என்கிறவர் அறியாதவர்களாக இருக்க வேண்டியதில்லை. குடும்பத்தினராக, நண்பராக, மிகவும் வேண்டியவராக தவிர்க்க முடியாதவராக இருக்கலாம்.
கணவன் – மனைவி என்று வரும் போது கணவனின் தாயும் மூன்றாம் நபர் தான் மனைவியின் தந்தையும் மூன்றாம் நபர் தான்.

மூன்றாம் நபரின் ஒரு ரகத்தினர் நல்லது செய்கிறேன் என்ற எண்ணத்துடன் அடுத்தவர் வாழ்வைக் குழப்புவார்கள்.

இன்னொரு ரகம் பொறாமையால் அடுத்தவர் சந்தோசமாக இருப்பதை சகிக்க முடியாமல் வாழ்வைக் குழப்புவார்கள்.

மற்றோர் ரகத்தினர் எவ்வாறென்றால் தான் தான் உயர்ந்தவர், தெரிந்தவர், தனது சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தன் அறிவை, அனுபவத்தை அடுத்தவர் புகழ வேண்டும் என்ற நோக்கில் அடுத்தவர் விடயங்களில் மூக்கை நுழைப்பார்.

இன்னும் சிலருக்கு இதுவே ஒரு சிறந்த பொழுதுபோக்கு. மிகச் சிலரே சந்தர்ப்ப சூழ்நிலைகளை சரியாகப்புரிந்து அடுத்தவரின் குணாதிசியங்களை அறிந்து பொருத்தமான நேரத்தில் சரியான வழிகாட்டல்களை சரியான முறையில் நடுநிலையாக நின்று வழங்குவார்கள். இவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.

பல விவாகரத்துக்களை மிக எளிதாக தவிர்த்திருக்கலாம். இரு தரப்பினர்களினதும் பெற்றோர்களும், உறவினர்களும் இணைந்து பிரச்சினைகளை உக்கிரமாக்காமல் இருந்து அவர்களுக்கு சரியான இடைவெளிகளை மட்டும் வழங்கியிருந்தால்.

காதி கோட்டிலிருந்து உளவளத்துணை நாடி வந்த ஒரு சில தம்பதியினரின் பிரச்சினைகளை ஆராய்ந்தேன். பிரச்சினையின் பின்னனி மூன்றாம் நபரின் தலையீடாக இருந்தது. மனைவி அணியும் ஆடை கணவனுக்கு பிடித்திருந்தது. கணவனின் தாய்க்கு பிடிக்கவில்லை. கணவனின் தொழில் மனைவிக்கு பிடித்திருந்தது. மனைவியின் சகோதரனுக்கு பிடித்திருக்கவில்லை.

இவ்வண்ணமே பிரச்சினைகளின் ஆரம்பங்கள் உருப்பெற்றிருந்தன. இவ்வாறே ஏனைய குடும்ப பிரச்சினைகளும்.

தவறுக்காக ஒரு தாய் பிள்ளையை தண்டித்த போது அடுத்த வீட்டு தாய் அப்பிள்ளையை ஆறுதல்படுத்துகிறேன் பேர்வழி என்று “பாவம் தானே புள்ள இப்படி அடிப்பீங்களா.. நானெல்லாம் எங்க புள்ள மேல கை வெக்கிறதே இல்ல.. நீ வாடா தங்கம் டெடா வந்தா மமாவ மாட்டிவிடு…” என்று அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்துச் செல்கிறாள். இங்கு அப்பிள்ளையின் பிழை மறைக்கப்பட்டு சுய அனுதாபம் அவனுள் ஏற்படுத்தப்பட்டு தாய் அன்பற்றவளாக சித்தரிக்கப்படுகிறாள்.

அதேபோல் தன் கணவன் முன் தன் அழகை வெளிப்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் தன்னை அலங்கரித்துச் செல்லும் ஒரு பெண்ணை “புதுப்பொண் என்ற நெனப்பு ” என்று சீண்டி விட்டு அவளது கணவனிடம் “நீ சம்பாதிக்கும் பணமெல்லாம் அவ உடுப்புக்கும், செறுப்புக்குமே சரியா போய்டும். கொஞ்சம் கண்டிச்சி வை ” என்று பற்றவைத்துட்டு செல்கிறாள் அவள் கணவனின் உறவுக்கார பெண்ணொருத்தி.

மறுபக்கத்தில் அந்த உறவுக்கார பெண்ணின் கணவன் இவளது அசுத்த ஆடைகளாலும், கலை இழந்த தோற்றத்தாலும் ஹறாமான ஒரு வழியை நாடிச் செல்கிறான். இங்கே இவளும் நிம்மதி இழக்கிறாள். அவள் பற்ற வைத்த நெறுப்பும் மும்முரமாக பற்றியெறிகிறது.

இதேபோல் இன்னொரு சம்பவம்.கற்பதில் மிக ஆர்வமும் , திறமையும் இருந்த மாணவியை பல்கலைக்கழகம் செல்லவிடாது தடுப்பதில் அவளின் தந்தையின் இரு சகோதரிகள் மும்முரமாக ஈடுபடுகின்றனர். . தந்தை அவர்களின் பேச்சைக் கேட்டு அவளை அனுப்ப மறுக்கிறார். தாய் போராடுகிறாள். காரசாரமான பல விவாதங்களுக்கு பின் அம் மாணவியின் உறுதி மற்றும் தாயின் போராட்டத்தால் பல்கலைக்கழகம் சென்று இன்று அம்மாணவி ஆயுர்வேத வைத்தியர்.

ஆனாலும் குறித்த தலையீட்டால் இந்த மாணவி எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். அத்தாய் இரு தடவைகள் மாரடைப்பிற்கு ஆளானாள். தந்தை ஒரு வருடமாக பேசவில்லை. மனச்சோர்வு எனும் டிப்ரசன் அவளை ஆட்டிப்படைத்தது. இரு தடவைகள் தற்கொலைக்கு முயன்றாள். இவைகளை கடந்தே இன்று அவள் ஓர் வைத்தியர். தந்தையின் பெருமைக்குரிய ஒரே மகள்.

அன்று ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போராடிய ஒரு தங்கையின் மகள் வண்ணமயமான வட்சப் ஸ்டேடஸ்களிலும், முகநூல் பக்கங்களிலும் அழகு பொம்மையாக சுற்றி வந்து ஈற்றில் அறிமுகமில்லாதவனிடம் தன்னை இழந்து இரண்டே வருடங்களில் திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். இன்னொரு தங்கையின் மகன் போதைக்கு அடிமை.
இப்படி பல கோணங்களில் பல பிரச்சினைகள் இந்த மூன்றாம் நபர் தலையீடுகளால் வாழ்வில் இடியப்பச் சிக்கல்களாக உருவெடுக்கின்றன.

ஆனால் இப்பிரச்சினைக்கெல்லாம் ஆணிவேர் மற்றும் மூலக்காரணம் உண்மையில் மூன்றாம் நபர் அல்ல. உங்கள் வாழ்வை பிறரின் கைகளில் ஒப்படைக்கும் உங்கள் கோழைத்தனமே. உங்களைப் பற்றி உம் சார்ந்தவர் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, புரிந்துணர்வு, வாழ்க்கை பற்றிய அறிவு, குழப்பி விடும் நபரின் நோக்கத்தை அறிய மறுக்கும் உங்கள் அறவீனம் இவற்றில் காணப்படும் உங்கள் குறையே உண்மைக் காரணம்.

அடுத்தவரின் வரையறையை அவர்களை விட நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதில் தான் உங்களுக்கும் உம் சாரந்தவருக்கும் இடையிலான உறவுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு வெளிப்படையாகிறது. இவர்களை தவிர்ப்பது கடினம். ஆனால் வரையறைக்குள் வைப்பது உங்கள் கைகளுக்குள் இருக்கிறது. சிந்தித்து செயற்படுங்கள்.

பிறர் எடுக்கும் கைப்பொம்மையாக நீங்கள் இருக்காதீர்கள். பொய்யான பேச்சுக்களையும், அனுதாபத்தையும் நம்பி உங்களை உண்மையாக நேசிக்கும் உறவுகளைக் கேவலப்படுத்தாதீர்கள். ஒருவரின் திருப்திக்காக இன்னொருவரை அநியாயமாக காயப்படுத்தாதீர்கள். எப்பொழுதும் நீதியாக, நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் மனதில் நிம்மதியும் பெருகும். உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா/ராணி என்பதை மறக்காதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய...

அதிரடியாக வெளியானது லியோ படத்தின் Badass பாடல்..

அதிரடியாக வெளியானது லியோ படத்தின் badass பாடல்.. இதோ https://youtu.be/IqwIOlhfCak

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் வாய்ப்பு? விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள...

விடுதலையானதும் தனுஷ்க குணதிலக வெளியிட்டுள்ள தகவல்

கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.  எனது வாழ்க்கை...