இவ்வாண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கமா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கும் இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சேவை வழங்குநரோடு கலந்துரையாடி ஆய்வு செய்தார். இவ்வாண்டு இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா வருகை தரும் 3500 ஹாஜிகளுக்கான சேவைகளை ‘அல் பைத்’ விருந்தாளிகள் எனும் நிறுவனம் வழங்குகிறது.
அல் பைத் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி உசாமா அப்துல்லதீபுக்கும் இலங்கைத் தூதுவருக்குமிடையில் மக்காவில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் போது இலங்கை ஹாஜிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் மற்றும் ஏற்பாடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன. இச்சந்திப்பின் போது ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸ்சல் ஜெனரல் காரியாலயத்தின் மூன்றாம் செயலாளர் சிப்லி மற்றும் ஹஜ் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி அஷ்ரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.