இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது எட்கா உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவோ அல்லது அதனை நடைமுறைப்படுத்தவோ எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பல தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று உள்ளது. அந்த உடன்படிக்கையின் படி நாங்கள் வேலை செய்கிறோம். அதையும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. சந்தையின் விரிவாக்கத்துடன், பல தசாப்தங்களுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், எட்கா தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.
எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான உடன்படிக்கைகளை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம் என்பதை நாம் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம். அதுதான் எங்களின் அடிப்படைக் கொள்கை. இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக எந்த நேரத்திலும் பாடுபட தயாராக உள்ளோம். அதுதான் எங்களின் தெளிவான நிலைப்பாடு”.