1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இலங்கையின் விவசாயத் துறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி.எஸ். சேனாநாயக்க அவர்கள், உண்மையான இலங்கையின் அடையாளத்தை நன்கு உணர்ந்தவராக நடவடிக்கை எடுத்தார். அதுவரை வறண்ட நிலமாக இருந்த திகாமடுல்ல பகுதியை நீர் வளத்தால் வளப்படுத்தும் பொருட்டு, சேனாநாயக்க சமுத்திரத்தைக் கட்டுவதற்கு அவர் முன்னுரிமை வழங்கினார். செழிப்பான நிலப்பரப்பைக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் விவசாய மேம்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரும் திட்டமான சேனாநாயக்க சமுத்திரத்தின் இடது கரையில் இருந்து ஊட்டம் பெற்று உயிர்ப்பிக்கப்பட்ட கரும்பு விவசாயம், கிழக்கு மாகாணத்தின் முதன்மையான விவசாயப் பயிர்களில் ஒன்றாக ஆனது.
1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், கல்-ஓயா சீனி தொழிற்சாலை, கரும்பு விவசாயிகளின் அறுவடையின் மூலம் 100% இலங்கை உற்பத்தியை நாட்டிற்கு வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
பிற பெரும்பாலான பயிர்கள் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகும் வேளையில், கரும்பு அறுவடைக்கு அதிகபட்ச விலையைப் பெறவும், அதன் மூலம் தமது பொருளாதாரம் மட்டுமல்லாமல், குடும்பத்தின் எதிர்காலத்தையும் வளப்படுத்திக்கொள்ளவும் விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1996 ஆம் ஆண்டில் அந்த தொழிற்சாலை மூடப்படும் வரையில், அதன் அனைத்து நன்மைகளும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களுக்கும், உள்நாட்டு சீனி நுகர்வோருக்கும் கிடைத்தன.


