கடந்த 2004 தொடக்கம் 2010, வரை நாட்டில் இருந்த வெள்ளைவேன் கும்பல்களை வைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களை கடத்தியும், கொலைசெய்தும், ஆறுகளில் உடல்களை வீசியும் நடந்த சம்பவங்கள் மீண்டும் அரங்கேறுவதற்கான முன்ஏற்பாடாகவே தற்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நோக்குவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த 14,ம் திகதி வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய மூவர் பிலியந்தலையில் உள்ள சமுதிதாவின் வீட்டில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு அதிகாரியை நோக்கி துப்பாக்கியை காட்டி வீட்டுக்குள் நுழைய முயன்றதுடன் பின்னர் வீட்டின் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பாக மேலும் கருத்துக்கூறுகையில்,
கடந்த காலங்களில் இலங்கையில் ஏறக்குறைய 46, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இதில் 36, தமிழ் ஊடகவியலாளர்களும்,08, சிங்கள ஊடகவியலாளர்களும், 02, அடங்குவர் பல ஊடகவியலாளர்கள் இலங்கையில் வாழமுடியாது என காரணம் காட்டி புலம்பெயர் நாடுகளில் தஞ்சம் அடைந்தும் உள்ளனர்.
மட்டக்களப்பிலும் மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன் உள்ளிடரடவர்கள் படுகொலை செய்யப்பட்டதால் மட்டக்களப்பில் இருந்தும் பல ஊடகவியலாளர்கள் இங்கு வாழமுடியாமல் ஐரோப்பிய நடுகளில் தஞ்சம் அடைந்த வரலாறுகள் உண்டு.
எஞ்சியுள்ள மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் பலருக்கு புலனாய்வாளர்களாலும், படையினராலும்்அடிக்கடி விசாரணைகள் என்ற போர்வையில் அழைத்து மன அழுத்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதை்அவதானிக்க முடிகிறது.
இதேபோலவே இலங்கையில் பல சிங்கள, தமிழ், முஷ்லிம் ஊடகவியலாளர்களும் வெளிநாடுகளில் தமது உயிரை பாதுகாப்பதற்காக புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
தற்போது ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு என வெளிப்படையாக கூறப்பட்டாலும் மறைமுகமாக நள்ளிரவு வேளைகளில் ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு வெள்ளை வேனில் சென்று அச்சுறுத்தும் படுமோசமான பயங்கரம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
சுதந்திரமாக ஊடகவியலாளர் வீட்டுக்கு முன்பாக வெள்ளைவேனில் சென்று கல்லெறிந்து அச்சுறுத்திய விடயம் எதிர்காலத்தில் இன்னும் பல இடங்களில் ஏற்படக்கூடிய வாய்பாக அமையும் என்பதையே இந்த சம்பவம் கோடிட்டுக்காட்டுகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை வைத்து கைது்செய்வது என்பது ஒரு புறமும் மறுபுறத்தில் அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் மேற்கொள்வதாக கூறி நாடாளுமன்றில் ஒரு பிரேரணையை முன்வைத்து நாடகம் ஆடும் போக்கே இப்போது உள்ளது. அந்த சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என்பதே தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு இதற்காவே கொழும்பு உட்பட நாடு்முழுவதும் கையொப்பம் பெறும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீண்டும் வெள்ளைவேன் கலாசாரம் தலை தூக்கியுள்ளதை ஊடகவியலாளர் பிலியந்தலையில் உள்ள சமுதிதாவின் வீட்டில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதிக்குள் வெள்ளை வேனில் நுழைந்து கல்லெறி தாக்குதல் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே இவ்வாறான தாக்குதல்களை கண்டிப்பதுடன் சம்பந்தப்பட்ட வெள்ளைவேன் கும்பல்கள் யாருடைய்பின்னணியில் இடம்பெற்றுள்ளது என்பதை பூரண விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் சர்வதேசம் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் கூறினார்.