சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்று முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்க உள்ளன.
இதற்கமைய, நாடுமுழுவதும், 1, 103 வைத்தியசாலைகள் மற்றும் 365 சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை என்பனவற்றில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ், சுமார் 50 ஆயிரம் பேரளவில் இந்தப் பணிப்புறக்கணிபில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டார்.
சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியாசாலை மற்றும் கொவிட் தொடர்புடைய வைத்தியசாலைகளில் எவ்வித பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது.
அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் என சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.