புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை நிலையமொன்றில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபரொருவரைப் பேலியகொடைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சுமார் 70 இற்கும் மேற்பட்ட CCTV காட்சிகளைப் பரிசோதித்த பின்னரே இந்தச் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 1993 ஆம் ஆண்டில் நாட்டினால் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 60 வயதுடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் அந்த விற்பனை நிலையத்திலிருந்து திருடிய தங்க ஆபரணங்களில் ஒரு பவுண் (Pawn) எடையுள்ள ஆபரணங்களையும், சுமார் 3 கிலோகிராம் எடையுள்ள வெள்ளி ஆபரணங்களையும் பொரளை சிறிசெத உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் மறைத்து வைத்திருந்ததாகச் சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டெடுத்தனர்.
கடந்த மாதம் 25 ஆம் திகதி இரவு, சந்தேகநபர் இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த விற்பனை நிலையக் கட்டிடத்தின் மேல் மாடியின் கூரையின் வழியாக கடைக்குள் நுழைந்து இந்தக் கொள்ளையைச் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்துப் பேலியகொடை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், இந்தக் கொள்ளைச் சம்பவம் ஒரு தனிநபராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இதன்போது கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சுற்றுவட்டார CCTV கெமராக்கள் ஊடாக 5 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவாக, சந்தேகநபர் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டது.
அதன் சாரதியிடம் விசாரித்தபோது, சந்தேகநபர் மாளிகாவத்தை பிரதேசத்தில் இறங்கிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு சந்தேகநபர் மற்றொருவருடன் கம்பளை, புபுரஸ்ஸ, பன்விலத்தென்ன பகுதிக்குச் சென்றுள்ளதாகப் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்படி, விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேகநபரை கைது செய்துள்ளது.
சந்தேகநபர் திருடிய தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் கொடுத்து ‘ஐஸ்’ மற்றும் போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்து பாவித்துள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது சிறுநீரகம் ஒன்றையும் விற்று போதைப்பொருள் பாவித்துள்ளார் என விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.






