இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த ஏழு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊழல் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சந்தேக நபர்களுக்கு 1994 இலட்சம் ரூபாய்களுக்கும் அதிகமான நிதி மீண்டும் அறவிடப்பட்டு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் சட்டத்தரணி நெலும் சமரசேகர வின் ஆலோசனைக்கு இணங்க செயற்படுத்தப்படும் விசேட சுற்றி வளைப்பு மற்றும் பணியகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதன்படி கலந்த ஏழு மாத காலப்பகுதியினுள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் 567 வழக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அக்காலப் பகுதியில் 2620 பல்வேறு முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்றன.
மேலும் இக்காலப் பகுதியில் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் ஊடாக 5 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் ஒரு அனுமதிப் பத்திரம் பெற்ற சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதிநிதி நிறுவனமும் அடங்கும்.
இக்காலப்பகுதியில் மோசடிகளில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அனுமதிப்பத்திரம் பெற்ற நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு நபர்களும் உள்ளடங்குவர்.
இதனிடையே 2024-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1825 இலட்சத்திற்கும் அதிகமான நிதி வெளிநாட்டு வேலை வாய்ப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அர விடப்பட்டு வழங்குவதற்கு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் கடந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புடன் இணைந்த 4658 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்றன.
இஸ்ரேல், தென்கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளிநாடு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து பண முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் பணியகத்தின் அனுமதியின்றி இவ்வாறான மோசடிக்காரர்களிடம் பணம் செலுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பணியகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் மோசடியாக பணம் பெற்ற நபர்கள் யாராயினும் அவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்களை பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.