2008 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
2008 மற்றும் 2024 வரையில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 மக்கள் பிரதிநிதிகளிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குறித்த விசாரணைகளுக்கு அமைய, பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
குற்றப் புலனாய்பு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்படி விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
விசாரணை தொடர்பாக ஜனாதிபதி நிதியக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விபரங்களைப் பெறுவதற்கான உத்தரவையும் விசாரணை அதிகாரிகள் கடந்த 2 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் பெற்றிருந்தனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிதியத்திலிருந்து நிதி வழங்கியது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தக் கோப்புகளின் படி, 22 மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு தொகைகளில் 100 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களில் கெஹலிய ரம்புக்வெல்ல, தி.மு.ஜயரத்ன மற்றும் டி.பி. ஏகநாயக்க நிதியிலிருந்து திருப்பிச் செலுத்தக்கூடிய அடிப்படையில் பணத்தைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளார்களா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பணத்தைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்துவரப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.