நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை (மீலாது விழா) முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி, மத அனுஷ்டானங்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் அஸ் – ஸெய்யித், கலாநிதி ஹஸன் மௌலானா (அல் – காதிரி) வினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளையடுத்தே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட கடிதமொன்றை, கடந்த 15ஆம் திகதியன்று, சுகாதார அமைச்சுக்கு நேரடியாகச் சென்று ஹஸன் மௌலானா கையளித்தார்.
இதனைக் கவனத்தில் கொண்டே, நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தன்று, (மீலாது விழா) நாடளாவிய ரீதியில் உள்ள சகல பள்ளிவாசல்களிலும், கொரோனா சுகாதார வழி காட்டல்களைப் பின்பற்றி, 50 நபர்களுக்கு மேற்படாமல், சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவால் 15ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தில் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக வழிகாட்டல்களை, இலங்கை வக்பு சபை வெகுவிரைவில் அறிவிக்கும் என்றும் இத்தினத்தன்று வக்பு சபையின் வழிகாட்டல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும், இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் அஸ் – ஸெய்யித் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.