பாகிஸ்தானில் BLA என்ற பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்ட ரயில் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு சுமார் 400-500 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army – BLA) என்ற கிளர்ச்சி அமைப்பு கடந்த 11 ஆம் திகதி கடத்தியது.
கிளர்ச்சியாளர்கள் தண்டவாளத்தில் வெடிபொருளை வைத்து தகர்த்ததால் ரயில் தடம் புரண்டு, பயணிகளை பணயக்கைதிகளாக பிடித்தனர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் இராணுவம், விமானப்படை, எல்லைப்படை மற்றும் சிறப்பு சேவைகள் குழு (Special Services Group) ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையை உடனடியாக தொடங்கின.
இதற்கமைய, இன்றைய தினம் (13) மீட்பு நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்ததாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்தது.
இந்த நடவடிக்கையில் 33 பலூச் விடுதலை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
துரதிர்ஷ்டவசமாக, 21 பணயக்கைதிகள் மற்றும் 4 துணை இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப், “இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன,” என்று தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் பாகிஸ்தானின் அமைதிக்கான உறுதியை அசைக்காது என்று பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கை முடிந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில் சேவைகளை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன