உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு அழைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை (08) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாளை (06) நடைபெறும் தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறையாகும்.
தேர்தல் தொடர்பான திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.