( ஐ. ஏ. காதிர் கான் )
கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, (18) சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் சுய தொழில் பயிற்சி நிலையத்தில் ( முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் ) நடைபெற்றது.
கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. கிளையின் தலைவர் அல்ஹாஜ் கௌசுல் பிர்தெளஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் நிட்டம்புவ பெளத்த விகாரையின் விகாராதிபதி கால்லே தம்மிந்த நாஹிமி தேரர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
விகாராதிபதி அவரது உரையில், “கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. தலைவர் பிர்தெளஸ் ஹாஜி, பரந்த மனதுடன் தனது கிராமத்து வாழ் வறிய மக்களுக்கு பெரும் சேவையாற்றி வருகின்றார். அவரிடம் இன, மத, பேதமில்லை. அனைத்து இன மக்களையும் ஒரே நிழலின் கீழ் அரவணைத்து வருகின்றார். இது, அவருடைய பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
இன்று பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதனைக்கூட, இன, மத பேதங்களை மறந்து, அதற்கு அப்பால் நின்று வழங்கும் ஒரு சிறந்த உள்ளம் படைத்தவராக விளங்குகின்றார். உண்மையில் சகோதரர் பிர்தௌஸ் ஹாஜியை, ஒரு நல்ல இதயமுள்ள மனிதராக நான் பார்க்கின்றேன்.
அவரது சமூக சேவைப் பணிகள் மெச்சத்தக்கவை. தொடர்ந்தும் கிராமிய மக்களுக்கு இது போன்ற பணிகளை ஆற்றுவதற்கு, அவருக்கு நல்லாசி வேண்டுகின்றேன்” எனப் பாராட்டிப் பேசினார்.
நிகழ்வில், முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத், கம்பஹா மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ருவந்தி பெர்னாந்து, கொழும்பு – கம்பஹா மாவட்ட வை.எம்.எம்.ஏ. பணிப்பாளர் நஸீர் காமில் உள்ளிட்ட பிரதிநிதிகள், பிரமுகர்கள், பெருந்திரளான மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.