இலங்கைக்கு மேலும் 408,650 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி முன்னதாக இந்தத் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட பிரிவினருக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸரை செலுத்துவதற்கு, தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்பக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசியைச் செயலூட்டியாகச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.