கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின் போது சுகாதாரதுறையை உரியவிதத்தில் நிர்வாகம் செய்யாதமைக்கான பொறுப்பை அமைச்சர் பவித்திர வன்னியாராச்சியே ஏற்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் முழு நடவடிக்கையும் குழப்பநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலானா அரசாங்கம் இதனை சரிசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பலர் முன்னெடுக்கின்ற நிலையில் சுகாதார அமைச்சரை மாத்திரம் குறைசொல்ல முடியுமா என்ற கேள்விக்கு அரசியல்வாதிக்கான கடமைமைய ஏனையவர்களுக்கான பொறுப்புகளுடன் ஒப்பிடமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் தடுப்பூசிவழங்கும் நடவடிக்கைகள் குறித்து பொய் சொல்கின்றன என அமைச்சர் தெரிவித்துள்ள குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலானா தடுப்பூசிவழங்கும் திட்டத்தை பல தரப்பினரும் விமர்சனம் செய்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த 1,264,000( புதுடில்லி500,000- சேரம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்தது 500.000 – கொவக்ஸ் திட்டம் மூலம் கிடைத்தது) டோஸ் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை உரிய விதத்தில் கையாளமைக்கு யார் காரணம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல் சுற்றில் 7,925.000 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன தற்போது அரசாங்கம் ஆறு இலட்சம் தடுப்பூசிகளை பெறுவதற்கு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது இது வேடிக்கையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தை இலகுவாக கையாள்கின்றார் ஆனால் ஏனைய மருத்து அமைப்புகள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் பதவி விலகி புதிய அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்ககூடிய சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலானா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் சுகாதார பணியாளர்களிற்கு தலைமைத்துவத்தை வழங்காமல் அவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கினார்,ஒரு தொழில்சங்கம் தெரிவிப்பதை மாத்திரம் ஏற்றுக்கொள்கின்றார்,உரிய துறைகளுடன் இணைந்து செயற்படவில்லை,அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளை ஐக்கியப்படுத்த தவறினார், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் போலியான நம்பிக்கைகளை ஊக்குவித்தார், கொவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் ஊழலிற்கு வழிவகுத்தார்,தொழிலாளர்களை அரசியல்ரீதியில் பழிவாங்கினார்,தொலைக்காட்சிகளில் பொய்களை சொல்லும் மருத்துவர்களை அலட்சியம் செய்தார்,தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை ஒரு வேடிக்கையாக மாற்றினார் எனவும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் போரம் தெரிவித்துள்ளது.
தனது அமைப்பு ஜனாதிபதியின் தலையீட்டை கோர தீர்மானித்துள்ளது என்றும் வைத்தியர் ருக்சான் பெலான தெரிவித்துள்ளார்.