பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

 

 

இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்தார்.

 

இலங்கை மற்றும் பங்களாதேஷின் அரசியல் மாற்றங்களில் காணப்படும் ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டிய பங்களாதேஷ் இராஜாங்க அமைச்சர், இரு நாடுகளினதும் அரசியல் மற்றும் நிர்வாகச் செயன்முறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 

நல்லாட்சியை மேம்படுத்துதல், சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ மற்றும் ‘பிரஜாசக்தி’ உள்ளிட்ட வேலைத்திட்டங்களுக்கு அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

அத்துடன், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியின் முக்கியத்துவம் மற்றும் நிலையான வலுசக்தித் தீர்வுகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை விருத்தி செய்வதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, மக்களின் ஆதரவுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், அபிவிருத்தியின் பலன்களைச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

மேலும், எதிர்வரும் 2027 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ‘எக்ஸ்போ ஸ்ரீ லங்கா’ கண்காட்சியில் பங்கேற்குமாறு பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான நேரடித் தொடர்புகளை மேலும் விருத்தி செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சலாஹுதீன் மஹ்மூத், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷா ஆசிப் ரஹ்மான், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோருடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச...