Date:

ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் இலங்கை புறப்பட்டனர் !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களும் (இலங்கை தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் என இலங்கைத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 4 பேரையும் உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்; அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியது.

இதனடிப்படையில் இன்று ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு புறப்பட்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் மூவரையும் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் தமது சமூக வலைதளப் பக்கத்தில், எனது அன்பு அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களுக்கு.. இன்றைய பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘விடுதலைக்கு விலங்கு’ எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள். ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன். சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள். பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள் என்று எழுதியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373