நாட்டின் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானின் ‘Child Fund’ நிதியம் சைக்கிள்களை அன்பளிப்புச் செய்துள்ளது. ஐநூறு சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பை இது வழங்கியுள்ளது. சைக்கிள்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hadeaki, ஜப்பானிய ‘Child fund’ நிறுவனத்தின் பிரதிநிதி யுகோ இஷாந்தா மற்றும் இலங்கை ‘Child fund’ நிதியத்தின் தேசிய பணிப்பாளர் திருமதி ADITI GOSH ஆகியோர் கலந்துகொண்டனர்.
மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்து சிரமம் உள்ள 12 மாவட்டங்களிலுள்ள 108 பாடசாலைகளிலி ருந்து 12-16 வயதுக்குட்பட்ட தெரிவான மாணவர்களுக்கு இச்சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. நாளாந்தம் இரண்டரை கிலோமீற்றர் தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் இவற்றைப் பெறுவர். மாணவர்களின் குடும்பங்களின் நிதி நெருக்கடிகள் மற்றும் பிற சிரமங்களும் இங்கு அளவுகோலாக கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ‘Child fund’ அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு இந்த உதவித்தொகை பெற்றுக்கொள்ளப்பட்டது. ஜப்பானிய தூதரகத்தின் பங்களிப்புடனும் கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழும் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படவுள்ளன.