2027 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நாம் பெரியளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கம் ‘கட்டமைப்பு மாற்றம்’ (system change) என்று கூறினாலும், நான் எந்தக் கட்டமைப்பு மாற்றத்தையும் பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றி அவர்
இன்னும் வருமானம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றாலும், செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,கடந்த ஆண்டும் கல்விக்கு 1.8 சதவீதமே இந்த 2027 வரவு செலவுத் திட்டத்திலும் அதே அளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடம் சுகாதாரத்திற்கு 1.8 சதவீதம் 2027க்கும் 1.8 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கடன் வாங்கும் அளவு, அதாவது ரூபா 3,800 பில்லியன்களாகும். இந்த வரவு செலவுத் திட்டத்திலும் கடன் வாங்கும் அளவு ரூபா 3,800 பில்லியன்களாகும்.
இந்த முறை பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடமும் 4.5% தான் எதிர்பார்க்கப்பட்டது.
அப்படியானால், ‘கட்டமைப்பு மாற்றம்’ நடந்திருந்தால் முதல் ஆறு மாதங்களில் இதைச் செய்திருக்க முடியாது என்று வைத்துக் கொண்டால் இப்போது இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது இது மூன்றாவது வருடம்.
எனவே மூன்றாவது ஆண்டிலும் இவர்களின் ‘கட்டமைப்பு மாற்றம்’ என்பது பழைய முறைப்படியேதான் முன்னோக்கிச் செல்கிறார்கள். மாறியுள்ள ஒரே ஒரு விடயம் மக்களின் பொருளாதார சுமை அதிகரித்துள்ளது.
மக்களுக்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறு கீழே வந்துள்ளது. மக்களுக்கு இருந்த அந்த நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது.
பொருளாதாரப் பக்கத்திலிருந்து பார்த்தால், இந்த வரவு – செலவுத் திட்டம் மூலம் மக்களின் உடைந்துபோயுள்ள ‘நம்பிக்கையை’ மேலும் உயர்த்திக் காட்டுவதற்கு ஜனாதிபதியால் என்ன ‘மேஜிக்’ செய்ய முடியும் என்று பார்ப்போம்.


