சாய்ந்தமருது பகுதியில் மத்ரஸா பாடசாலை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இயங்கிவரும் மத்ரஸா பாடசாலை ஒன்றிலிருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், சாய்ந்தமருது காவல்துறையினரால் மத்ரஸா பாடசாலையின் நிர்வாகியான மௌலவி கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு அளிக்கப்பட்டட முறைப்பாட்டிற்கமைய குறித்த மத்ரஸா பாடசாலை தொடர்பான துரித விசாரணைகளுக்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அதிகாரியொருவரும்; பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 4 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







