புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியை மாற்றம் செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுத்தரக்கோரியும் புத்தளம் விவசாய காரியாலயத்துக்கு முன்பாக “பாதிக்கப்பட்ட பெண்களின் நீதி மையம்” என்ற அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் “காதி நீதிபதியின் முறைகேடான நடவடிக்கைகளை நாம் கண்டிக்கின்றோம்” , ” பணம் இருப்பவர்களிடம் சரிந்து விடுகிறது வழக்கு” , “இந்த காதியின் அநீதிக்கு முடிவில்லையா” , “விதவைகளை உற்பத்தி செய்கிறது காதியின் கரை படிந்த கரங்கள்” , “நீதிக்கான இடத்தில் காதியின் அநீதி நடக்கிறது ” , “சுய தேவைகளுக்காக பெண்களை பயன்படுத்தும் நபர் தண்டிக்கப்படவேண்டும்” எனும் சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரிபாய் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளம் காரியாலயத்தில் இது தொடர்பான மகஜரை கையளித்தமை குறிப்பிடத்தக்கது .


(எம்.யூ.எம்.சனூன்)







