வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (27) இந்தச் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிறுவனமொன்றின் பணிப்பாளர்களாக பணியாற்றி, வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, பின்னர் அரைகுறையாக வீடுகளைக் கட்டி முடித்துவிட்டு பணத்தைச் சுருட்டி நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபர்கள் வீடுகளைக் கட்டி முடிப்பதற்காக 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆண் 27 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான யுவதி 19 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் பூகொட மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்தச் சம்பவம் குறித்து நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


