மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் மின்னியலாளர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 36 வயதுடைய கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது சட்டத்தரணியுடன் கல்கிசை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நேற்று முதல் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இரு அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நபரொருவரின் கைகளை முழங்கையுடன் வெட்டி எடுத்துச்சென்ற சந்தேகநபரை கைது செய்ய மொரட்டுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை (21) இரவு மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் 40 வயதுடைய நபரின் கைகளைத் துண்டித்துள்ளார்.
இடம்பெற்ற சம்பவத்தில் கொரலவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் மின்னியலாளர் ஒருவரே கைகளை இழந்திருந்தார்.
பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் கைகளை எடுத்துச் செல்லாமல் இருந்தால் அவற்றை ஒட்டவைத்திருக்க முடியும் என்று வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.