காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.
மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாவும் மத்திய அரசு பிரித்தது.
இந்த நிலையில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்காத வரை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்காத வரை நான் ஒருபோதும் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை.
இது ஒரு முட்டாள்தனமான முடிவாக தெரிந்தாலும், என்னைப் பொருத்தவரையில் இது உணர்ச்சிகரமான முடிவு. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
பஞ்சாயத்து தேர்தல்தான் ஜனநாயகத்தின் உண்மையான சோதனை என்றால், நாட்டில் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி பதவிகள் எதற்கு? ஜம்மு காஷ்மீரில் இரும்பு முஷ்டி அணுகுமுறையை மத்திய அரசு தொடர்வது சாத்தியமில்லை. ஒவ்வொரு நாளும் அதிக அழுத்தத்தை உருவாக்குகிறார்கள்.
அதிக சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். அதிகமானவர்களைக் கைது செய்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பை விரும்பவில்லை. எந்த விதமான கருத்து வேறுபாட்டையும் விரும்பவில்லை.
கருத்து வேறுபாடுகளின் குரலுக்கு அவர்கள் இடமளிக்க விரும்பவில்லை. அவர்கள் எல்லாம் அழகாக இருக்க விரும்புகிறார்கள்” என்றார்