சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை
நேற்று
(05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், அவர் சாதாரண கைதிகள் தங்கியிருக்கும் சிறை அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (5) உத்தரவிட்டது.
கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் மீதமுள்ள காலத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.


