ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலகுமாறும் இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறக்கூடிய உண்மையான பிரதிநிதித்துவ இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குமாறும் இலங்கைத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றமைக்காக ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கைத் திருச்சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஒருவர் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்திருந்தால் மட்டுமே அவரின் பதவிக் காலம் முறையானதாக இருக்கும் என்பதை ஜனாதிபதிக்கு நினைவில் கொள்ளவேண்டும்.
மதத் தலைவர்கள்,குடியியல் சமூகம் மற்றும் தெருவில் இருக்கும் சராசரி ஆணும் பெண்ணும் அவர் பதவி விலக வேண்டும் என்று கோருவதைக் கொண்டு, இந்த நாட்டை இனி ஆட்சி செய்ய அவருக்கு எந்த ஆணையும் இல்லை என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்ட விரோத அரசாங்கம், நாட்டின் சீரழிந்து வரும் நிலை குறித்து அவ்வப்போது விளக்கமளித்து, மோசமான நிலைக்குத் தயாராகுமாறு மக்களை எச்சரிப்பதில் மட்டுமே வல்லமை கொண்டுள்ளதாக இலங்கைத் திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சுயநலவாதிகளால் பாதிக்கப்படாத மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒரு திருச்சபை என்ற வகையில், நமது நாட்டின் அர்த்தமுள்ள மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில், அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கைத் திருச்சபை குறிப்பிட்டுள்ளது.