தேங்காய்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2194/73 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தேங்காய்க்கான அதிபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 13 அங்குலம் சுற்றளவு கொண்ட தேங்காய்களின் அதிபட்ச சில்லறை விலை 70 ரூபாவாகவும் , 12 – 13 அங்குலம் சுற்றளவைக் கொண்ட தேங்காய்களின் அதிபட்ச சில்லறை விலை 65 ரூபாவாகவும் , 12 அங்குலம் சுற்றளவைக் கொண்ட தேங்காய்களின் விலை 60 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட 2232/38 ஆம் இலக்க வர்த்தமானியூடாக அறிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தலில் , ‘ 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார சட்டத்தின் 20(5) உறுப்புரைக்கமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய , நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 2020.09.25 அன்று வெளியிடப்பட்ட தேங்காய்களுக்கான அதிபட்ச சில்லறை விலை தொடர்பான 2194/73 வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுகிறது.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.