எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று (19) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாளாந்தம் 1,000 மெற்றிக் டன் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் நேற்று பாதிப்படைந்திருந்தன.
இதன் காரணமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பாதிப்பு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்பில் 165 மெகாவோட் மின்சாரத்திற்கான பற்றாக்குறை நிலவியது.
அத்துடன்,எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் நேற்று (18) மதியம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.