இலங்கை தற்போது பயங்கரமான நிலைமைக்கு வந்துள்ளதாகவும் அனைவரும் தமது வீடுகளில் சாப்பிட தேவையான ஏதாவது ஒன்றை பயிரிட்டு கொள்வது நல்லது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
வீதிகளில் தனித்து வாகனங்களில் செல்வதை தடை செய்ய வேண்டும் எனவும் வாகனங்களில் கட்டாயம் மூவர் அல்லது நான்கு பேர் பயணிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாகனத்தில் ஒருவர் பயணிப்பதன் மூலம் பெருந்தொகையான எரிபொருள் இந்த வாகனங்களுக்கு செலவாகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 7 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகிறது.
இதனால், அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் வாகனங்களை பயன்படுத்தி, அனைவரும் சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். வாகனங்களை வீதியில் செலுத்தும் முன்னர் இரண்டு முறை சிந்திக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய செலவாகும் 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள உலக நாடுகளிடம் இலங்கை கடனாளியாக மாறியுள்ளது. இலங்கை எதிர்காலம் இதனை விட மிக மோசமான நிலைமைக்கு செல்லலாம் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.