பேலியகொட மெனிங் பொதுச் சந்தைக்கான மரக்கறி விநியோகம் நூற்றுக்கு 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மெனிங் பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் எச். எம். உபசேன தெரிவித்துள்ளாா்.
உர பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் மரக்கறி பயிர்ச்செய்கையை கைவிட்டுள்ளமை மற்றும் பயரிடப்படும் மரக்கறிகளின் அளவு குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மெனிங் பொதுச் சந்தைக்கு நுவரெலியா, யாழ்ப்பாணம், தங்காலை, அக்குரெஸ்ஸ, கண்டி, மட்டக்களப்பு, கடுவெல மற்றும் தெனியாய உள்ளிட்ட நாட்டில் மரக்கறி பயரிடப்படும் சகல பிரதேசங்களில் இருந்தும் மரக்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், கடந்த சில தினங்களாக இந்த பிரதேசங்களிலிருந்து மெனிங் சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மரக்கறிகளின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ போஞ்சி 500 ரூபாவிலிருந்து 600 ரூபா வரையிலும், ஒரு கிலோ கெரட் 350 ரூபாவிலிருந்து 400 ரூபா வரையிலும், லீக்ஸ் ஒரு கிலோ 350 ரூபாவுக்கும், தக்காலி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 600 ரூபாவுக்கும், முள்ளங்கி ஒரு கிலோ 200 ரூபாவிலிருந்து 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.