ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த ஆண்டு உருவாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போதைய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அரசாங்கம் நீண்ட காலம் ஆட்சியில் இருக்காது.
அடுத்த ஆண்டே அரசியல் திருப்பமொன்று ஏற்படும். இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. பொது எதிரி அரசாங்கமே.
அடுத்தாண்டு ஒரு பொதுவான கூட்டணி உருவாகும் என நான் உறுதியாக நம்புகின்றேன்” என்றார்.