இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வேண்டாம் என்ற நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என நாம் கேட்கின்றோம்.
எம்மை புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது? எனவே ஜனாதிபதியிடம் நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்வார் என்பது எமக்கும் தெரியும்.
ஜனநாயகத்தை பாதுகாக்க மாட்டார் என்பதும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்கு தெரியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினால் நாட்டில் கறுப்பு சந்தையின் ஆதிக்கம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9 ), ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவருமான கலாநிதி திஸ்ஸ விதாரணவினால் கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருக்கும் அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதுவரை காலமாக இல்லாத அளவிற்கு நிலைமைகள் மோசமாக உள்ளது. பல பில்லியன் கடன்களை செலுத்த வேண்டியுள்ள நிலையில் கையிருப்பில் இரண்டு பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ளன. இவ்வாறான நிலையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் இலங்கைக்கு வரும் டொலர்களை 180 நாட்களுக்குள் ரூபாவிற்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கறுப்பு சந்தையோன்று உருவாவதை தடுக்க முடியாது.
கறுப்பு சந்தைக்கு சகலரும் செல்லும் நிலைமை ஏற்படும். சட்டம் குறித்து பேசிக்கொண்டு இருக்காது டொலர் தட்டுப்பாட்டு குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்,
ஒருபுறம் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது விவசாயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் முன்னெடுக்க முடியும். ஆனால் மக்களுக்கே பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.
அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நட்டஈடு கொடுத்துவிட்டு மக்களுக்கு ஏற்படும் உணவு தட்டுப்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு கொடுப்பது?
மக்களுக்கு ஒருவேளை உணவு கிடைக்காவிட்டால் ஏற்படும் நிலை என்ன? என்பது சகலருக்கும் தெரியும். அடுத்த ஒரு வாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். இதனை எவரும் மறுக்க முடியாது. இந்த நெருக்கடியில் கறுப்பு சந்தையின் தேவை அதிகரிக்கும்.
மக்களும் கறுப்பு சந்தையை நாடும் நிலைமை ஏற்படும். மேலும், வங்கித்துறை நிச்சயமாக வீழ்ச்சி காணும். இதனை தவிர்க்க முடியாது. வங்கிகளே கடன்களுக்குள் தள்ளப்பட்டுள்ளன. வங்கிகளில் பணம் இல்லை.
இவ்வாறான நிலையில் அடுத்த ஜனவரி மாதமளவில் நாட்டின் வங்கிக்கட்டமைப்பில் பாரிய வீழ்ச்சி நிலையொன்று ஏற்படும். இதனால் பாரிய பிரச்சினை ஏற்படப்போகின்றது.
இது மக்களின் சேமிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் பணம், இல்லாது போகும் நிலையொன்று ஏற்படும். இதனாலும் அப்பாவி மக்களே பாதிக்கப்படபோகின்றனர்.
அரசாங்கத்தை உள்ளிருந்து விமர்பிப்பது அர்த்தமற்ற ஒன்றாகும். 20 ஆம் திருத்தத்திற்கு கைதூக்கும் வேளையில் ஏன் இவர்களுக்கு சிந்திக்க முடியாது போனது?
சீனாவின் பொறிக்குள் சிக்குண்டு நாடு நெருக்கடியை சந்திக்கும் என்ற காரணத்தினால்தான் போர்ட் சிட்டி சட்டமூலதிற்கும் நாம் கைதூக்கவில்லை, 20 ஆம் திருத்ததிற்கும் கைதூக்காமல் இருக்க காரணமும் இதுவே. இன்று அரசாங்கத்தில் இருந்துகொண்டு எதிர்கட்சியாக செயற்படமுடியாது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்று பொய்களை கூறி வருகின்றார். இயற்கை உரம் திட்டத்திற்கு மாறியுள்ளதாக கூறி வருகின்றார்.
சர்வதேசத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அரச தலைவர்கள் நிறைவேற்றவில்லை. யுத்தம் முடிந்த பின்னர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதாக முழு உலகத்திற்கும் வாக்குறுதி கொடுத்து உதவிகளை பெற்றுக்கொண்டனர்.
ஆனால் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் இன்றும் எந்தவொரு நாடும் இலங்கைக்கு உதவிசெய்ய மறுத்து வருகின்றன. மேலும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சகல மக்களுக்கும் ஒரே மாதிரி சட்டம் இயங்கும் என நாம் எதிர்பார்த்தால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சட்டம் பின்பற்றப்படுகின்றது. அதுமட்டுமல்ல, இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் வேண்டாம் என்ற கொள்கையில் அரசாங்கம் இருகின்ற நிலையில், இந்த செயலணிகள் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பதை நாம் கருத்திற் கொள்ளப்போவதில்லை.
இந்த ஆணைக்குழுவின் தலைவர் யார்? அவரது தகுதி என்ன? என்பதை புதிதாக கூற வேண்டியதில்லை.
இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வேண்டாம் என்ற நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது.
ஜனநாயகம் பாதுகாப்பது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுக்காக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்கு தெரியும். ஆனால் குற்றவாளிகளை கைது செய்வார், ஈஸ்டர் தாக்குதலில் குற்றவாளிகளை தண்டிப்பார் என நினைத்தோம். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என்று வலியுறுத்தும் நபர்களையே கழுத்தை பிடிக்கின்றார்.
குற்றவாளிகளை கைது செய்வதாகவோ அல்லது நியாயத்தை நடைமுறைப்படுத்த அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறு சிறு தவறுகளை செய்தனர். அவர்கள் குற்றவாளிகள் என்றால் அவர்களுக்கு தண்டனை வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிமெடுக்கவில்லை என்றால், தீர்வு வழங்கவில்லை என்றால், மக்கள் ராஜபக்ஷர்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20 ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தை பிடித்து வெளியில் வீசுவார்கள் என்றார்.