பிரபல அழகு கலை நிபுணர் சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட 15 பேர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பசறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சந்திம ஜயசிங்க உள்ளிட்ட பலர், கடந்த 30ம் திகதி கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
தனிமைப்படுத்தல் சட்டம் அமலில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.