சீரற்ற வானிலையால் கடந்த இரண்டு வாரங்களில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொடரும் அடைமழை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
635 வீடுகள் பகுதியளவிலும் 12 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, எல்லயிலிருந்து நமுனுகுல ஊடாகப் பசறைக்கு செல்லும் வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மரம் மற்றும் கற்பாறை சரியும் அபாயம் நிலவுவதால் குறித்த வீதி அண்மையில் மூடப்பட்டிருந்தது.
எனினும், தற்போது சீரமைப்பு பணிகள் இடம்பெற்றுக் குறித்த வீதி போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, தொடரும் சீரற்ற வானிலை காரணமாகத் தெதுரு ஓயா நீர்த்தேகத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த நீர்த்தேகத்தின் அருகில் மற்றும் அதன் தாழ் நில பகுதியில் வசிப்போர் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.