அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஓடிப்போவதோ அல்லது பீதியுடன் பார்ப்பதோ அல்ல, மாறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அனர்த்தத்தின் போது கடற்படையினர் ஆற்றிய பங்கு மகத்தானது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, குறிப்பாக கலா ஓயாவில், கூரை மேல் மரண பயத்தை அனுபவித்த மக்களுக்கு நம்பிக்கை அளித்து, இழக்கப்படவிருந்த ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிய கடற்படையினரின் பணியை நன்றியுடன் பாராட்டினார்.
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இன்று பிற்பகல், திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியை வந்தடைந்த முப்படைகளின் தலைவர் , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடற்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
2024/03 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 08 அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 33 அதிகாரிகள் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 65 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 28 அதிகாரிகள் இங்கு பயிற்சியை முடித்து வெளியேறிச் சென்றனர்.
பயிற்சி காலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய இடைநிலை அதிகாரிகளுக்கு விருதுகளையும், அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு கௌரவச்சின்னமாக வாள்களையும் ஜனாதிபதி வழங்கினார்.
அனர்த்த காலங்களில் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற, தமது உயிரைத் தியாகம் செய்த கடற்படை அதிகாரிகளை இதன்போது ஜனாதிபதி நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
இன்று நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலான போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதில் கடற்படையினர் ஆற்றிய பங்களிப்பையும் ஜனாதிபதி பாராட்டினார்.
போதைப்பொருள் கடத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், இந்த அச்சுறுத்தலிருந்து தாய்நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதியாக தனக்கும், கடற்படைத் தளபதிக்கும், அனைத்து அதிகாரிகளுக்கும் அவர்களின் பதவிகளைப் பொறுத்து வெவ்வேறு பொறுப்புகள் இருந்தாலும், அந்தப் பொறுப்புகள் அனைத்தும் ஒரு நிலையான அரசுக்கு அவசியமானவை என்றும், ஒரு நாட்டை தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரமே முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே, எந்தவொரு தொழிலையும் அல்லது பொறுப்பையும் இரண்டாம் பட்சமாகக் கருதக்கூடாது என்றும், ஒவ்வொரு பொறுப்பையும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்படும் பங்களிப்பின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார்
இந்த நாட்டில் மிகவும் மதிக்கப்படும், ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இன்று முதல் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றும் அதிகாரிகளாக மாறுமாறு அழைப்பு விடுத்ததுடன், பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் அனைத்து அதிகாரிகளுக்கும் வெற்றிகரமான தொழிற்துறை முன்னேற்றத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்






