கம்பளை வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ்.இளங்கோவனின் சடலம் சற்றுமுன் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவரின் சடலத்தை பூண்டுலோயாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக, அவரின் உறவினா்கள் `தமிழன்’ இணையதளத்துக்கு தெரிவித்தனா்.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போய் 51 நாட்களின் பின்னர் வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து கடந்த 29ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தாா். நேற்று அவரின் இறுதி கிரியைகள் இடம்பெறவிருந்த நிலையில், அதன்பின்னா் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இறுதி கிரியைகளுக்காக நேற்று சடலம் உறவினா்களிடம் கையளிக்கப்படவில்லை.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீண்ட நாட்கள் குறித்த தண்ணீர் தங்கியில் இருக்கவில்லை என்றபது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த தாங்கியிலுள்ள நீரையே நோயாளர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை நிர்வாகம் குடிநீராகவும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கம்பளை மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் எம்.எச்.எம்.நசீமிடம் பலர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.