இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று (20) பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கான முதலாவது விமானம் இலங்கையிலிருந்து இன்று (20) அதிகாலை 5.20 அளவில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலையத்தின் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1147 என்ற விமானமே இவ்வாறு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த விமானத்தில், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தின் 95 பௌத்த தேரர்கள் சென்றுள்ளனர்.
அவர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம், இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் நேற்று (19) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றிருந்தது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவானது இந்த பயணத்தினூடாக வலுப்படுத்தப்படுவதாக அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.