திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கிய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளையும், கொள்கைகளையும் இன்று முழுப் பொய்யாக மாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் மூதூர் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இதே வேளை அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி அன்றும் இன்றும் நாளையும் என என்றுமே முன்நிற்கும். இந்த மக்கள் ஜனநாயக பலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் வாழ வேண்டும். ரணசிங்க பிரேமதாச கூட இவ்விரு நாடுகளும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்தார். அண்மையில், நமது நாட்டில் ஒரு இளைஞன் பலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரித்து ஸ்டிக்கர் ஒட்டியபோது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, தடுப்புக் காவலில் வைத்திருக்கும் உத்தரவைக் கூட அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி பிறப்பித்தார். இந்த நாட்டு மக்களுக்கு தமது கருத்துக்களைப் பேசுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் உரிமைகள் காணப்படுகிறது. இந்த உரிமைகளை யாராலும் தடை செய்ய முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.