பலஸ்தீன் மற்றும் காசா மக்களுக்காக துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் குறிப்பாக பஜ்ரு, வித்ருத் தொழுகைகளின் குனூத் ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களிடமும் மஸ்ஜித் இமாம்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதல் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களினால் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம்.
அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு அவசரமாக சுகத்தையும் கொடுத்தருள்வானாக.
இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும் பொழுது அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும்.
ஆகவே, புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று இருக்கும் நாம், இம்மாதத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நல்லமல்களுக்குப் பின்னரும் பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் துஆக்களில் ஈடுபடுமாறும் குறிப்பாக பஜ்ருத் தொழுகையின் குனூத்திலும் வித்ருத் தொழுகையின் குனூத்திலும் மஃமூம்களுக்கு சடைவில்லாதவாறு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கை வாழ் முஸ்லிம்களையும் மஸ்ஜித் இமாம்களையும் வேண்டிக்கொள்கிறது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.