தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் என்பன தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கருத்து.
2025 வரவு செலவு திட்டத்தின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (15) பங்கேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பிரதான விடயங்களில் கருத்துரைத்தார்.
🟩 தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்.
பொது மக்களின் பாதுகாப்பு குறித்து நேற்றும் பேசினேன். அக்மீமன பூஸ்ஸ, தல்தென, மீகஹகிவுல, அகுனுகொலபலஸ்ஸ, வெலிவேரிய துப்பாக்கிச் சூடுச் சம்பவங்கள், மூதூரில் படுகொலை, மீண்டும் அம்பலாங்கொடையில் கொலை, கொழும்பு கிராண்ட்பாஸில் இரு கொலைகள் என பல சம்பங்கள் நடந்துள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கும் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.