பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் வாத்திகான் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாக சுவாச பிரச்சினையால் அவதியுற்று வரும் பரிசுத்த பாப்பரசருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் போதிலும், நேற்றிரவு முதல் அவருக்கு சுவாச பிரச்சினை மேலும் அதிகரிக்கவில்லை என்று வாத்திகான் தெரிவித்துள்ளது.