நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 7ம் திகதி இரவு பரவிய தீயினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வலபனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு, தெரிவித்தது.
தீ பரவிய வீட்டில் 6 பேர் வசித்து வந்த நிலையில், தீயினால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தீ விபத்து நேர்ந்த வேளையில், உயிரிழந்த வயோதிபரின் மகனான இரவீந்திரன், மது போதையில் வீட்டுக்கு வெளியே இருந்த நிலையில் உயிர் தப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து, ராகலை பொலிஸார் உள்ளிட்ட பல விசேட பொலிஸ் குழுக்களின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், உயிர் தப்பிய இரவீந்திரனிடம், ராகலை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை நடத்தியிருந்தனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட விசாரணைகளில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேகநபரான இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் ராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் கொள்வனவு செய்துள்ளதாகவும், சம்பவத்தில் வீடு எறிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்திய நிலையில், அவர் நேற்று (12) பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட செயலா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.