பெண்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், கோடீஸ்வரர்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் 35 பேரினது ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன், 300 அரச அதிகாரிகளின் பாரிய நிதிநிலை இரகசிய ஆவணங்களும் அவற்றில் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் ஊடாக நாடுகளின் முக்கிய நபர்கள் தங்களின் நிதிநிலை தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளிநாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களில் இரகசியமாகப் பேணி வருகின்றமை தெரியவந்துள்ளது.
ஜோர்தான் மன்னர் 70 மில்லியன் பவுண்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் பல சொத்துக்களை இரகசியமாகப் பேணி வருகின்றமை குறித்த ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதவிர பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளயர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 312,000 பவுண்ட்ஸ்களை மோசடி செய்திருப்பதும் இந்த ‘PANDORA PAPERS’ ஆவணக் கசிவினூடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இரகசிய சொத்துக்கள் மொனோக்கோவில் இருப்பது இதனூடாகத் தெரியவந்துள்ளது.
அஸர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியெஃப் உட்பட அவரது குடும்பத்தினர், ஐக்கிய இராச்சியத்தில் 400 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களை வாங்கியுள்ளனர்.
அத்துடன், அவரது 11 வயது மகனுக்காக லண்டனில் 30 மில்லியன் டொலர் பெறுமதியான கட்டடம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாகிஸ்தான் பிரதமருக்கு நெருக்கமானவர்களும் இவ்வாறு மில்லியன் கணக்கான டொலர்களை வைத்துள்ளதாக ‘PANDORA PAPERS’ ஆவணம் ஊடாகத் தெரியவந்துள்ளது.