மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை இதனைத் தெரிவித்துள்ளது.
பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இரண்டு வாரத்திற்குத் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரச சேவைகளுக்காகத் தொடருந்துகளில் பயணிப்போரைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில், சில பேருந்துகளில், ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாகப் பயணிகள் ஏற்றிச்செல்லப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் இன்று (04) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பிலான ஆலோசனைகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.