பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு, 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கண்டியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபையை அழைத்து, கலந்துரையாடவுள்ளதாக கூறிய ஜனாதிபதி, தேவை ஏற்படும் பட்சத்தில் புதிய சட்டங்களை வகுக்கவும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக செலுத்தப்படாதுள்ள ஊழியர் சேமலாப நிதியை எதிர்வரும் ஆண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.